Friday, 1 April 2011








நான் அறிந்திராத ஒன்று...


வெங்கட் காலையில் எழும்போதே மனதிற்குள் சீழ்க்கை அடித்தான். இனம் புரியாத சந்தோசம் மனம் முழுதும் ரீங்காரமிட்டது. இன்று சனிக்கிழமை தான் கொஞ்சம் தாமதமாக போனால் போதும், என்ன தான் அரசாங்க வேலை பார்த்தாலும் அதில் கிடைக்காத ஒரு நிம்மதி சுயமாய் செய்யும் போது கிடைத்தது.
வெங்கட் படித்து முடித்தவுடன் அந்நிய நாடான துபாயில் தான் முதல் வேலை. பணி நிமித்தமாக அடிக்கடி நாடு விட்டு நாடு போய் தானே முழுதும் இயந்திரமாகி  போனான்.
அப்போது தான் அவனுக்கு ஒரு வாய்ப்பு கிட்டியது. அதை கெட்டியாய் பிடித்து கொண்டான். இப்போது இந்தியாவில் உள்ள அனைத்து கனரக தொழிற்சாலை முழுதும் இவனுடைய வேதி கூற்று தான். கல்யாணம் முடித்தான் சுகர திசை உக்ரமாக இவன் மீது விழுந்து , ஆளே மாறி போனான். முகத்திலும் உடலிலும் செழுமை , ஆனாலும் பழசை மறக்காதவன் .

ஆயிற்று. குழந்தைகள் இருவருக்கும் பரீட்சை முடிந்து கோடை விடுமுறை ஆரம்பமாகி விட்டது. வருடத்திற்கு ஒரு முறை குடும்பத்தோடு எங்காவது மலை வாசஸ்தலம் செல்வான். குழந்தைகளுக்கும் குதூலமாய் நேரம் கழியும் . இவனுக்கும் வருடம் பூரா அலைவதற்கும் ஒரு ஒய்வு கிடைத்த மாதிரி இருக்கும் .  இந்த முறை கேரளா குன்னூர் செல்லலாம் என்று பிளான் பண்ணி விட்டான்.

அதான் ஐயாவிற்கு இவ்ளோ சந்தோசம். சகதர்மிணி சுஜா டீ கோப்பையை கொண்டு வந்து கொடுத்தாள்.  வெங்கட் அதை வாங்கி கொண்டே அவளை தன் பக்கத்தில் உக்காருமாறு சைகை செய்தான். அவளும் என்னவென்று கேட்டவாறு அமர்ந்தாள்.

அவளிடம் டூர் ப்ரோக்ராம் பற்றி கூறினான். தங்க வேண்டிய வசதிகள் எல்லாம் செய்ததாகவும் , இந்த முறை செல்லும்போது தான் படித்த கல்லூரியையும் சென்று பார்க்க போவதாகவும் கூறினான். சுஜா ஆச்சர்யத்தில் கண்கள் விரிந்தன. மனம் முழுதும் சந்தோசம் பரவியது. அவளிடம் அவனுடைய கடந்த கால வாழ்க்கை குறித்து எப்போதும் சொன்னதில்லை . அதே சமயம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை அது தான் உண்மை.

அடுத்த சில நாட்களில் அனைவரும் காரில் கிளம்பினர்.  கோவை சென்று ஒரு நாள் தங்கி, பின் அங்கிருந்து அவன் படித்த கல்லூரிக்கு சென்றனர். கல்லூரியில் காலடி தடம் பதித்த உடன வெங்கட்  தன்னுடைய கல்லூரி கால நினைவுகளில் மூழ்கி போனான்.

அவன்  கல்லூரி விடுதியில் தங்கி படித்தான். அவன் தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்தான். காலம் என்ன தான் கோடுகள் போட்டாலும் அழியாத சில நிஜங்கள் இருக்கத்தானே செய்யும் நாம் இருப்பது போல். அறையின் வர்ணமும் இன்ன பிற விசயங்களும் மாறி தான் இருந்தது ஆனால் அறை மட்டும் அப்படியே. பழகிய நண்பனை பார்ப்பது போல் வெங்கட் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தான் . ஜன்னல் ஓரம் உக்கார்ந்து படித்ததை நினைவு கூறினான். இப்போது தங்கி இருந்த பையனும் அதே போல் மேஜை நாற்காலி போட்டு வைத்திருப்பதை பார்த்து அதில் அமர்ந்து ஜன்னல் வழியாய் வெளியே பார்த்தான் . நீல பூக்கள்   தூவியது போல் ஆகாயம் தெரிந்தது. எழுந்து வெளியில் வந்தான் .

கல்லூரிக்குள் சென்று தான் உக்கார்ந்து இருந்த இருக்கையும் காட்டினான். ஒவ்வொன்றாய் பார்த்து கொண்டு வரும்போது அவனுக்கு ஏதோ ஒரு புது உலகத்தில் பயணிப்பது போல் இருந்தது. மீண்டும் அந்த கல்லூரி பருவம் கிட்டாதா என ஏக்க பெருமூச்சு எழுந்தது. அருகில் தன் மனைவி குழந்தைகள் இருப்பதை மறந்து அவன் ஒவ்வொன்றையும் ஆர்வமாய் விவரிக்கும் போது சுஜாவும் குழந்தைகளும் சுவாரசியமாய் கேட்டனர். சுஜாவிற்கு மனதிற்குள் சந்தோசமாய் இருந்தது. கணவனை பெருமையாய் பார்த்தாள்.

அவன் நடந்த இடங்கள். உக்கார்ந்து இருந்த பூங்கா பென்ச் , யாருக்கும் தெரியாது முதல் முறையாய் தம் அடித்த இடம் எதையும் விட்டு வைக்கவில்லை. அனைத்தையும் சொல்லி கொண்டு வந்தான்.


கடைசியாக மெயின் ப்ளாக் வந்தான் . அங்கு தான் தேர்வு முடிவுகள் மற்றும் இன்ன பிற தகவல் பலகைகள் இருக்கும் என்று சொல்லி கொண்டே வந்தான்.
அங்கு முதன்மை மாணவர்கள் பட்டியல் இருந்தது. இதுவரை முதன்மையாய் இருந்த மாணவர்கள் பட்டியலில் வெங்கட் பேரும் இருந்தது.

அதை கண்டதும் வெங்கட் தன் கண்களை தானே நம்ப முடியாது திருப்பி படித்தான். கண்களில் இருந்து அருவியாய் நீர் கொட்டியது. பரீட்சை எழுதி விட்டு டிகிரி கூட தபாலில் தான் பெற்று கொண்டான். சிறந்த மாணவனாக வந்திருப்பதை அவன் அறியவில்லை.
சுற்றம் மறந்து கேவி கேவி அழுதான். அது ஆனந்த கண்ணீர். அவன் அழுவதை குழந்தைகள் புரியாமல்  பார்த்தனர். அவர்களும் வேகமாய் அருகில் வந்து அழ ஆரம்பித்த உடன தான் வெங்கட் சுய உணர்விற்கு வந்தான். உடனே கேக்க்கேக்க்கேகீ  என்று அவர்களை பார்த்து நையாண்டி செய்தான். குழந்தைகள் உடனே அழுவதை நிறுத்தி விட்டு அவனை பார்த்து சிரித்தனர். கோடை குதூலம் அப்போதே ஆரம்பித்து விட்டது அவர்களுக்கு. ....

Tuesday, 29 March 2011

புரிதல் சுகம்....


 புரிதல் சுகம்....

சாம் அலுவலகத்தில் இருந்து கிளம்பி கொண்டு இருந்தான். பன்னாட்டு நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிகிறான். புதிதாய் திருமணமான ஜோடி.  மனைவி லீனா பட்டதாரி ஆனால் வேலை பார்க்கவில்லை. சாம் அவளை கட்டாய படுத்தவும் இல்லை. சாம் வீட்டிற்கு ஒரே பிள்ளை அம்மாவும் அப்பாவும் சொந்த ஊரை விட்டு வர மனம் இல்லாமல் அங்கேயே தங்கி விட்டனர். இவர்கள் மட்டும் வேலை நிமித்தமாய் பெங்களூர் வந்து இருந்தனர்.

சாம் அடிப்படையில் மிக மிக அன்பானவன். நெடிதுயர்ந்த நெட்டிலிங்க மரம் போல் வளர்ந்த தேகம்
கூர்மையான கண்கள். எடுப்பான நாசி. மீசை இல்லாத அவன் முகத்தில் அப்படியே பால்ய முக தோற்றம் .
அசப்பில் கொஞ்சம் அஜித் மற்றும் ஆர்யா இருவரையும் கலந்து செய்த உருவமாய் தெரிவான்.
அதிகம் பேச மாட்டான். கல்யாணம் என்று பேச்சு எடுத்த உடன தீர்மானமாய் சொல்லி விட்டான்  நல்ல குணமுள்ள பெண்ணாக  இருக்கவேண்டும் என்றும் பணம் , படிப்பு எல்லாம் ரெண்டாம் பட்சம் தான் என்று..
அதே போல் பார்த்து பார்த்து தான் லீனாவை அவனுக்கு மணமுடித்தார்கள் பெற்றோர். திருமணம் முடிந்து  இன்றோடு 6 மாதம்   ஆகிறது இதுவரை இவன் விரல் கூட அவள் மீது தெரியாமல் பட்டது இல்லை.
ஆச்சர்ய பட வேண்டாம். அவளுக்கு இஷ்டம் இல்லாமல் அவளை தொடுவதற்கு கூட தயங்கினான்.
கல்யாணம் ஆகாமலே ஆண் பென் இருவரும் காமுறும் இந்த வேளையில் தன் மனைவிக்கு பிடித்தமாய் இருப்பது தான் நல்ல தாம்பத்தியம் என்று அடிக்கடி கூறுவான்.
 எவன் ஒருவன் கட்டிய மனைவியை சந்தோசமாய் வைத்து கொள்கிறானோ அவன் இறந்து சொர்கத்திற்கு செல்வான் என்பான். ஞாயிறு தவறாமல் சர்ச்சுக்கு செல்வான். முக்கியமாய் கிறிஸ்துமஸ் சமயத்தில் வாழ்த்து பாடல் பாடி வீடு வீடாய் சென்று வருவான். சில சமயம் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் போட்டு குழந்தைகளுக்கு பரிசு கொடுப்பான்.
சாம் வீட்டிற்கு வந்தால் பெல் அடிக்க மாட்டான். ஒரு ஐந்து நிமிடம் காத்திருந்து பின் அவனே கதவை திறந்து உள்ளே சென்று விடுவான். இன்றும் அப்படி தான் செய்தான். லீனா சோபாவில் உக்கார்ந்து இருந்தாள்  சிநேகமாய் இவனை பார்த்து சிரித்தாள். சாம் தானும் வந்து சோபாவில் அமர்ந்தான். டிவியில்
பாட்டு ஓடி கொண்டு இருந்தது. லீனா காபி எடுத்து வருவதாக எழுந்தாள். சாம் அவளை அமர சொல்லிவிட்டு  டிவியை ஆப் செய்தான் . உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்றான். அவள் கேள்வி குறியோடு அவனை பார்த்தாள் . சாம் தொண்டையை செருமி கொண்டு இன்று அவனது வீட்டில் இருந்து தொலைபேசி வந்ததாகவும் , கல்யாணம் ஆகி இத்தனை மாதங்கள் போயும் ஏதும் விசேசம் இல்லையா என்று அம்மாவும் அப்பாவும் கேட்டதை அவளிடம் பகிர்ந்து கொண்டான்.
உன்னுடைய விருப்பம் என்ன ? என்று கேட்டவுடன் லீனாவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
உங்கள் விருப்பம் தான் என் விருப்பம் என்று மட்டும் கூறினாள். சாம் அதை ஒத்துக்கொள்ளவில்லை.
உன்னுடைய சம்மதம் எனக்கு முக்கியம் . உன்னுடைய சம்மதம் இல்லாமல் நான் எதுவும் செய்யமாட்டேன் என்று கூறினான். லீனா மெலிதாய் சிரித்தாள் . பின் அவனை பார்த்து நான் எப்போதும் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்? அதுவும் எனக்கு சம்மதம் என்றான் அவள் கூறி முடிக்குமுன்பே.
என்னை மட்டும் கேட்டீங்களே , உங்களுக்கு மட்டும் விருப்பம் இல்லையா என்றாள். சாம் இப்போது அவளை நேராக பார்த்து சொன்னான். தாம்பத்தியம் என்பது சங்கீதம் . வீணை வாசிக்கும் போது அந்த வீணையின் நாண்கள் கையை கிழிக்காது வாசிப்பது எப்படியோ அதை போல தான் . உனக்கு பிடிக்காத ஒன்றை செய்ய தலைபட்டால் உன் மனது  நிச்சயம் காய படும் . அதை நான் விரும்பவில்லை என்றான். லீனா அவனை இழுத்து அணைத்து கொண்டாள்.  எனக்கு மிகவும் பெருமையாய் இருக்கு . என் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் உங்கள் மனம் கோனாதவாறு நிச்சயம் நானும் முயற்சி செய்வேன் என்றாள். மீண்டும் அங்கு டிவியில் பாடல் ஒலித்தது. "உறவுகள் தொடர்கதை...உணர்வுகள் சிறுகதை" ஒருகதை இன்று முடியலாம்.. முடிவிலும் ஒன்று தொடங்கலாம்... இனியெல்லாம் சுகமே...

Thursday, 24 March 2011

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை

 
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை 





மேரி.... மேரி... கத்திகொண்டே ஓடி வந்தான் ராஜு. திரும்பி நின்று தலையை சாய்த்து பார்த்தாள் மேரி. அவள் தலை சாய்த்து பார்த்தாலே ஒரு அழகு தான். ஈறுகள் தெரிய அழகாய் சிரிப்பாள். பல் வரிசையை வைத்து பற்களை எண்ணிவிடலாம். ராஜு அவள் அருகில் வந்து "ரெண்டு நாளா கணக்கு சொல்லி தரவே இல்ல" பரீட்சை வேற வருது என்றான். அவன் தலையில் நறுக்கென்று "கொட்டினாள்". நீ வராம என்ன எண்டா குத்தம் சொல்லுறே என்றாள் . ராஜு தலையை சொறிந்தவாறு சிரித்தான். அவள் சொல்வதும் உண்மைதான். இவன் போகாமல் அவளை குற்றம் சொன்னால் யாருக்கு தான் கோவம் வராது.  மேரியை முதன் முதலில் பார்க்கும்போதே ராஜுக்கு பிடித்து விட்டது. அவள் அவனை விட ஒரு வருடம் பெரியவள்.  அவள்  வீட்டிற்கு அருகில் குடி வந்து கடந்த ஆறு மாதங்களில் அவளோடு நன்றாய் ஒட்டி கொண்டான். அவள் இந்த வருடம் பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு தயாராகிறாள் . ராஜு ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான். ராஜுக்கு ஆறாம் வகுப்பிலிருந்து கணக்கு என்றாலே கொஞ்சம் உதறும். அப்போதிருந்து அவன் மற்ற பாடங்களில் நல்ல மார்க் எடுத்தாலும் கணக்கில் மட்டும் ஜஸ்ட் பாஸ் தான். ராஜுவின் அம்மாவும் அவனுக்கு வெண்டைக்காய் சமைத்து போட்டாலும் சரி. மெமரி பிளஸ் வாங்கி கொடுத்தாலும் சரி. கணக்கு மட்டும் இவனிடம் நெருக்கமாய் வரவே இல்லை. பிள்ளையாரை வேண்டிக்க சொல்லியும் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துவதாய் வேண்ட சொல்லியும் பார்த்தாயிற்று. ஆனால் அன்று மட்டும் வடையும் / பிள்ளையாருக்கு செய்த கொழுகட்டையும் கிடைத்தது சாப்பிடுவதற்கு ...ஆனால் கணக்கு? இந்த சமயத்தில் தான் ராஜு வின் அப்பா தரகு முறையில் இந்த வீட்டிற்கு வந்தார். ராஜுவிற்கு பள்ளி கொஞ்சம் தூரம் தான் . ஆனால் அருகில் இருந்த மேரி வீட்டில் தான் முதல் முதலில் பேசினார் அப்பா. மேரியின் அப்பாவும் அவளது அண்ணனும் பறவைகள் சுடும் துப்பாக்கிகள் செய்பவர்கள் . எனது தந்தையும் போலீஸ் லாகாவில் பணி புரிவதால் அவரிடம் கொஞ்சம் மரியாதை ஜாஸ்தி . அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ராஜுவிற்கு இதெல்லாம் விட மேரி , அவளிடம் பேசிய முதல் வார்த்தையே நீ நல்லா படிப்பியா? அவள் தலையை சாய்த்து நன்றாய் படிப்பதை சொன்னாள் , அப்போதே அவனுக்கு அவளை பிடித்து போனது. அதற்கு பிறகு பள்ளி செல்லும் நேரம் தவிர மற்ற எல்லா நேரங்களும் அவளிடம் தான் கழிந்தன. மேரி அழகாய் குச்சி விளையாட்டு விளையாடுவாள். இதற்காக வீட்டிற்கு பின்னால் இருக்கும் தென்னை மரத்தில் இருந்து புது தென்னம் குச்சி கொண்டு  விளையாடுவாள். அவளோடு இவனும் சேர்ந்து கொள்வான். அது தவிர அழகாய் கோலம் போடுவாள். அவளது அண்ணன் நிர்மல் கோவக்காரன் தான் ஆனாலும் அதை இவளிடம் காட்டுவதில்லை. இவள் மீது அதீத பாசம் உண்டு. அவளது அப்பா மரியம் தாஸ் மாலையானால் குடித்து விட்டு திட்டி கொண்டு இருப்பார். யாரை திட்டுகிறார் என்று ஒருநாளும் விளங்கவில்லை. மேரிக்கு அம்மா கிடையாது. ராஜுவிற்கு கணக்கு வரவில்லை என்றதும் மேரி தானே முன் வந்து சொல்லி கொடுப்பதை சொன்னாள். அதை கேட்டதும்  சாட்சாத் அந்த சரஸ்வதி தேவியே நேரில் வந்து வரம் கொடுத்ததாய்  புளாங்கிதம் அடைந்தான். கணக்கு மேல் இருந்த வெறுப்பு எங்கு சென்றது என்றே தெரியவில்லை.  நமக்கு பிடித்தவர்கள் சொல்லி கொடுப்பதனால் கணக்கு என்ன ... அது எதுவாய் இருந்தாலும் பிடித்து போகும். ராஜுவிற்கு கணக்கு பிடித்து போனது விந்தை இல்லை. அதை பற்றி தான் புகார் சொல்லி கொண்டு இருந்தான். மேரியும் அதற்கு நன்றாகவே பதில் கொடுத்தாள். பள்ளி விட்டு வந்த உடன சந்தியாவந்தனம் செய்துவிட்டு. அம்மா தரும் பூஸ்ட் குடித்துவிட்டு நேராக அவளது வீட்டிற்கு சென்று விடுவான். அதற்கு பிறகு சரியாக அப்பா வரும் சமயம் தான் வீட்டிற்குள் வருவான். அம்மா ஒருமுறை மேரியிடம் என் மகனை தத்து எடுத்துகொண்டாயா  என்று கேட்டு விட்டார்கள். சமயத்தில் அவளது அண்ணனும் அப்பாவும் துப்பாக்கி தேவையான கட்டைகள் வாங்க பக்கத்துக்கு டவுனுக்கு செல்வார்கள். அப்போதெல்லாம் அவளுக்கு துணை அவன்தான். படிக்க சென்று விட்டு அங்கேயே தங்கி விடுவான். ஒரு முறை கனத்த மழை. வீட்டில் அவளும் ராஜுவும் மட்டும் தான் இருந்தனர். தீடிரென மின்னல் வெட்டி டமால் என்று இடி விழுந்த சத்தம் கேட்டு அவள் இவனை இறுக்கமாய் கட்டி கொண்டாள். ராஜு சிரியோ சிரி என சிரித்தான். அவளது பயத்தை அடிக்கடி கேலி பேசினான். இவனுடைய பள்ளி உயிர் தோழன் கோபி இவளை வைத்து கொண்டே மேரியின் பட்ட பெயரை சொல்லி அழைத்து . " கரிச்சான் " "கரிச்சட்டி" என்று கேலி செய்தான். ராஜு அவன் மீது பாய்ந்து சண்டை போட்டு அவனோடு ஒரு வாரம் பேசாமல் விலகி சென்றான். பின்னர் கோபி இவனிடம் வந்து கெஞ்சி இனி அவ்வாறு ஒருபோதும் பேச மாட்டேன் என்று சத்தியம் செய்த பிறகு அவனிடம் பேசினான்.
மேரி அவனிடம் என்னை உனக்கு அவ்ளோ பிடிக்குமாடா என்று கேட்க , அவளை பார்க்காது  தலையை குனிந்து கொண்டு ஆமாம் என்று தலை ஆட்டினான். மேரி  அவனை திருஷ்டி கழித்து சொடக்கு போட்டாள். ராஜுவிற்கு பெருமையாய் இருந்தது. மேரியை யாரும் எதுவும் சொல்லிவிட கூடாது என்பதில் மிகுந்த கவனமாய் இருந்தான். அம்மாவிடம் சொல்லி அவளுக்கு பிடித்த சீடை, முறுக்கு தட்டை எல்லாம் செய்து கொண்டு போய் கொடுப்பான். மேரி அப்போதெல்லாம் வேண்டாம் என்று  மறுப்பாள். அப்போது இவன் நிர்மல் அண்ணாவை துணைக்கு அழைப்பான். அவரும் அவன் கொடுப்பதை வாங்கி கொண்டு , சிறிது எடுத்து கொண்டு மிச்சத்தை மேரியிடம் கொடுத்து விடுவார். ராஜு விஷமமாக சிரிப்பான். அவள் ஞாயிறு சர்ச்க்கு செல்வதை பார்க்க அவ்வளவு அழகாய் இருக்கும். ரோஸ் கலர் பூபோட்ட நீண்ட கவுன் போட்டு இருப்பாள் தலைக்கு தூய வெள்ளை மஸ்லின் துணியை சுற்றி கொண்டு இருப்பாள். சில சமயம் இவனும் அவளுடன் சர்ச்க்கு செல்வான். அவளை மிதி வண்டியில் வைத்து கொண்டு செல்லும்போது இவனுக்குள் உற்சாகம் சிறகடிக்கும். மிகவும் சந்தோஷ தருணங்கள் அவனுக்கு அதுவாக தான் இருக்கும். ஒருமுறை அவளது அப்பாவும் அண்ணாவும் பக்கத்துக்கு ஊருக்கு சென்றிருந்த நேரம், எப்போதும் போல் அவன் அவள் வீட்டிற்கு வந்தான். அன்று பார்க்கும் போது மேரி மிக அழகாய் தோன்றுவதாய்
தெரிந்தது.  பாடங்கள் படித்து முடித்த பின்பு, எப்போதும் படுத்தவுடன் தூங்கி விடும் ராஜுவிற்கு தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தான். அவளை இடித்து கொண்டே இருந்தான். அவள் இவன் பக்கம் திரும்பி படுத்தாள். ஏதாவது சொல்லேன், தூக்கம் வரல என்றான் ராஜு, மேரி குளுக் என்று சிரித்தாள், என்றும் இல்லாமல் அவள் மீது புதிய வாசனையை உணர்ந்தான் ராஜு. அதை அவளிடமே கேட்டான். அவள் ஏதேதோ சொல்லி விட்டு திரும்பி படுத்தாள். அவளை கட்டாய படுத்தி அதற்கு விளக்கம் கேட்டான். மேரி பதில் ஏதும் சொல்லாமல் படுத்து விட்டாள். சிறிது நேரம் கழித்து தன் மீது ஏதோ ஊர்வதை போல் உணர்ந்தான் ராஜு. யாரோ தன்னை கட்டி அணைப்பதை அவனால் அறிய  முடிந்தது , தனக்குள் ஏதோ ஒரு மாறுதல் நிகழ்வதை அவனால்  உணர முடிந்தது. ராஜு விடிந்ததும் வேகமாய் வீட்டிற்கு சென்று விட்டான். அவனால் மேரியின் முகத்தை பார்க்க பிடிக்கவில்லையோ இல்லை தைரியம் இல்லையோ அவளை தவிர்த்து வந்தான். அது தான் அவன் செய்த மிக பெரிய தவறு என்பதை வரும் நாளில் தெரிந்து கொண்டான். அவளிடம் பாடம் படிப்பதையும் நிறுத்தி விட்டான். மேரிக்கு அவ்வ போது தமிழ் பாடத்தில் வரும் சந்தேகமெல்லாம் இவன் தான் தீர்த்து வைப்பான்.இப்போது அதுவும் நின்று போனது. இப்போதெல்லாம் அவன் மேரி வீட்டிற்கு செல்வதை பாதியாய் குறைத்து விட்டான். அம்மா கேட்ட போது ஏதோ சொல்லி சமாளித்தான். முழு ஆண்டு தேர்வும் வந்தது . பரீட்சை காரணமாய் அவளை சுத்தமாய் மறந்தே போனான். அன்று கடைசி பரீட்சை முடித்து விட்டு வரும்போது எதிரில் மேரி வந்து கொண்டு இருந்தாள், ராஜுவிற்கு சங்கடமாய் இருந்தது , மேரி இவனை பார்த்து கொண்டே வந்தாள் , அவள் அருகில் வர வர இவனுக்கு இதய துடிப்பு அதிகமானது, எப்போதும் அவளை பார்த்தாள் சுவாதீனமாய் சிரிப்பான், ஆனால் அன்று சிரிப்பை கட்டாய படுத்தி வரவழைத்தான் , ஏண்டா, என் மீது உனக்கு இவ்வளவு கோவம்? என்னை இப்பெல்லாம் சுத்தமா பாக்கறது இல்ல, படிக்க வரதில்லை? என்னடா ஆச்சு உனக்கு என்று கேட்டாள். இன்னும் சிறிது அழுத்தி கேட்டால் அழுதே இருப்பான் ராஜு, எதுவா இருந்தாலும் பேசி இருக்கலாமே என்று கேட்டாள். இவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை, வார்த்தைகளை மென்று விழுங்கினான்.

அவனுக்குள் இருந்த இன்னொரு ராஜுவை அவனுக்கே அடையாளம் காட்டியது அவள் தான். இருந்த போதும் அவனுக்கு அது ஏனோ பிடிக்காமல் போனது. தலையை குனிந்து கொண்டு இருந்த ராஜுவின் தாடையை பிடித்து தூக்கி பார்த்தாள் , ராஜு கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர், பதறி போனாள் மேரி, ஏண்டா அழறே நான் ஏதாவது தப்பு செய்து விட்டேனா என்றாள். ராஜு பதில் சொல்ல தெரியாது தலையை திருப்பி கொண்டான். மேரி "ப்ளீஸ் சொல்லுடா" மனசுக்கு கஷ்டமா இருக்குடா என்றாள். ராஜு, அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல, வீட்ல கொஞ்சம் வேலை என்றான் எங்கோ பார்த்து கொண்டு, அவ்வளவு பெரிய ஆள் ஆயிட்ட அப்படிதானே என்றாள். இல்ல மேரி அப்பா இப்போஎல்லாம் பூஜை பண்ண பூ பறிச்சிட்டு வர சொல்லுறார், நான் தான் போக வேண்டி இருக்கு என்றான். மேரி பதிலேதும் சொல்லாமல் சென்று விட்டாள்.
அவள் போவதை பார்த்து கொண்டு இருந்த ராஜு மனதிற்குள் ஏதோ சொல்லிக்கொண்டு சென்றான்.

அன்று பரீட்சை முடிவுகள் வந்திருந்தன . ராஜு வேக வேகமாக நாளிதழ் அலுவலகம் சென்று பேப்பர் வாங்கி கொண்டு வந்தான் . வரும் போதே மேரி வீட்டருகே கும்பலாய் தெரிந்தது , மனம் கலவரப்பட்டது, பேப்பர் எடுத்துக்கொண்டு அனைவரையும் விலக்கி கொண்டு உள்ளே சென்றான். அங்கே அவன் கண்ட காட்சி அவன் வாழ்வில் ஒருபோதும் பார்க்க போவதில்லை. மேரியை நடு வீட்டில் கிடத்தி இருந்தார்கள். தலை மாட்டில் இவன் ஆசை ஆசையாய் வாங்கி தந்த மெழுகு ஸ்டான்ட் வைக்க பட்டு எரிந்து கொண்டிருந்தது. அவள் தேர்வாகி விட்டதை சொல்ல வந்த அவனுக்கு இது பேரிடியாய் இருந்தது.

எதற்கும் எப்போதும் அவன் அழுததில்லை என அவன் அம்மா மேரியிடம் கூறுவாள். அப்போதெல்லாம் மேரி இவனை பார்த்து ஏண்டா நான் சட்னு போயிட்டா எனக்காக அழமாட்டியா என்பாள். ராஜு பைத்தியம் மாதிரி பேசாதே என்பான்.
பெரும் குரல் எடுத்து இவன் அழுவதை பார்த்த நிர்மல் இவனை வந்து கட்டி கொண்டான். அவனுக்கு மேரி அவனை கட்டி கொண்டது தான் நினைவுக்கு வந்தது.......



Monday, 14 March 2011

I AM WORKING FOR RAILWAYS....



எங்கள் வீட்டில் எந்த ஒரு விசேசம் என்றால் வீடே திருவிழா மாதிரி தான், காரணம் எங்கள் வீட்டின் எண்ணிக்கை அப்படி. எனது நண்பன் சொன்ன ஒரு கமெண்ட். "இந்த தொகுதி கவுன்சிலர் தேர்தல் உங்க  வீட்ல இருக்குறவங்க வோட்  போட்டா போதும் போல" அதே போல இன்னொரு நண்பன் "ஒரே  வீட்டுல இவ்வளவு பேரு இருந்தா அப்புறம் ஜனத்தொகை என் எகுராது" இப்படி பல பெருமைகளை கொண்டு இருந்த போதிலும் , எங்கள் வீட்டில் நடக்கும் காமெடி கலாட்டாக்கள் சில சமயம் சினிமாவை மிஞ்சியும் கலை கட்டும். அப்படி ஒரு காமெடி கலாட்டவை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பேரு உவகை கொள்கிறேன்....
எங்கள் அண்ணாவின் கல்யாணம் முடிந்த தருணம் அது, எல்லோரும் அவர் அவர் ஊருக்கு செல்வதற்கு ஆயத்தமானார்கள் , இதில் என்ன காமெடி இருக்க போகிறது என்று தானே நினைக்கிறீர்கள் , மேல படிங்க ..

அனைவரையும் அனுப்ப வேண்டிய பொறுப்பு எனக்கு இருந்தது , ஆகையால் எல்லோருக்கும் கார் அனுப்பி கொண்டு இருந்தேன்
ஒரு வழியாய் அனைவரையும் அனுப்பியும் விட்டேன். கடைசியாக எனது மதுரை அண்ணா வீட்டிற்கு வந்து கிளம்பி செல்வதை சொன்னார் , அதன் படியே வீட்டிற்கு எல்லாவற்றையும் மூட்டை கட்டி கொண்டு வந்து சேர்ந்தாயிற்று.
அன்றைய நாள் நன்றாகவே கழிந்தது. எல்லோரும் சேர்ந்து கடற்கரை போனோம். அங்கும் நல்ல கூட்டம் தான்... எல்லோரும் சேர்ந்து குழைந்தையோடு குழந்தையாகி செம லூட்டி அடித்தோம்.
மதுரை அண்ணா ஊருக்கு கிளம்பி கொண்டு இருந்தார். அப்போது எனது அக்காவின் மகன் பேரு சதீஷ், என்னிடம் அவசரமாக வந்தான் , தானும் என்னுடன் வருவதாய் கூறினான். அண்ணா , அண்ணி மற்றும் குழந்தைகளை எக்மோர் ஸ்டேஷன் இறக்கி விட்டு விட்டு அவனை அம்பத்தூரில் உள்ள அவனது அக்கா வீட்டிற்கு செல்வதற்கு சென்ட்ரல் ஸ்டேஷன் இறக்கி விடும் படி கேட்டு கொண்டான். கார் தானே சுமக்க போகிறது, நம்மளா சுமக்க போறோம் ,சரி அதுக்கென்னடா வாடா என்று கூறி விட்டு, உடனே அவனுக்கு செக் வைத்தேன், இங்க பாரு, அண்ணா , அண்ணி , குழந்தைகளை எக்மோர் ல விட்டுட்டு அப்புறம் தான் சென்ட்ரல் போறோம் என்றேன் , எனது புத்திசாலி தனத்தை நான் மெச்சிக்கொண்டேன் எனக்குள், அதற்கு அவன் இடமே கொடுக்கவில்லை என்ன மாம்ஸ் , பெரிய மாமா ஊருக்கு போறாங்க அவங்க தானே முக்கியம், முடிஞ்சா விடுங்க இல்லைனா நானு பஸ் பிடிச்சி போய்க்கிறேன் அப்டின்னு பொக்ரான் போட்டான்.  இவன் வந்தா நமக்கு கொஞ்சம் டைம் பாஸ் ஆகுமேன்னு அவசர பட்டு பேசிட்டோமோ என்று என்னை நானே நொந்து கொண்டு, சரிடா நீ சொல்லுறதும் சரிதான் என்று சமாளிப்ஸ்  செய்து விட்டு எக்மோர் கிளம்பினோம் . எங்கள் வீடு இருந்த இடம் ஆழ்வார்திருநகர் ... அனைவரும் அறிந்த இடம் தான் என்ன ஒரு சிக்கல்னா  கோடம்பாக்கம் டூ போரூர் வரை சாலை மிக குறுகிய சாலை... தேவை இல்லாத இடங்களில் எத்தைனையோ பாலங்கள் கட்டிய அரசு முதலில் இங்கு கட்டி இருக்கலாம் . ஒரு பஸ் நின்னா அதற்கு பின்னால் புகை வண்டி பிரயாணம் போல் அனைத்து வண்டிகளும் நின்று விடும் ..இதற்கு இடம் பற்றாக்குறை அல்ல காரணம் , மொத்த இடத்தையும்  தனியார் வியாபாரிகள் சுவாஹா பண்ணிவிட்டதால் (சாலை வரை நீட்டித்து) இட பற்றா குறையால் அனைவருமே அல்லல் பட வேண்டிய கட்டாயம் . நாங்கள் எவ்வளவோ சீக்கிரம் கிளம்பியும் , அன்று ஏதோ ஒரு ஊர்வலம் வேறு., அனைத்தையும் தாண்டி எக்மோர் சென்று சேரும் சமயம் ஏறத்தாழ வண்டி புறப்பட சில நிமிடங்களே இருந்தன, ஸ்டேஷன் போகும் அவசரத்தில் நடை பயண சீட்டு வாங்க மறந்து விட்டேன். அவர்களை சரியான பெட்டி பார்த்து ஏற்றி விட்ட பிறகு இவன் காதில் நான் கிசு கிசுத்தேன் .டேய் மாப்ஸ் வந்த அவசரத்துல நடை பயண சீட்டு வாங்கலடா, வண்டி கிளம்புற முன்னால கிளம்பிட்ட பிரச்சனை இல்ல என்றேன், அதை கேட்ட மாத்திரத்தில் அவன் முகாம் பிரகாசம் ஆனது, மாம்ஸ் நீங்க சொல்லுறதும் சரிதான், சரி வாங்க போகலாம் என்று கூறி, விடைபெற்று கொண்டு வெளியே வந்து விட்டோம், எனது மனதிற்குள் ஏதோ ஒரு கோடி பணத்தை சேமித்து விட்டதாக அற்ப சந்தோசம் வேறு, வெளியே வந்து பார்க்கும்போது எங்கள் வண்டியின் டிரைவரை காண வில்லை ,அவனை தேடி வந்து கொண்டு இருக்கும்போது தேனினும் இனிய குரல் ஒலித்தது. 2 பிளாட்போறம் இருந்து வைகை இப்போது கிளம்ப போகிறது என்று ஒலி பெருக்கியில் வந்த அந்த குயிலின் ஓசை கேட்டு , அதுவரை காரசாரமாக பேசி என்னுடன் வந்து கொண்டு இருந்த என்னுடைய மாப்ஸ் சட்டென ஸ்டேஷன் நோக்கி ஓட ஆரம்பித்தான், எனக்கு ஒன்றும் புரியவில்லை, ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது, ஏதோ வில்லங்கமா பண்ண போறான் என்று ! அவனை துரத்தி கொண்டு நானும் ஓடினேன்... அவன் பாய்ச்சலாக ஓடினான், வேகமாய் ஓடியவன் ஒவ்வொரு பெட்டியாக பார்த்து கொண்டு, எனது அண்ணா & குரூப் பெட்டி வந்த உடன இரண்டு கைகளையும் அகல விரித்து டாட்டா காட்டி கொண்டு இருந்தான். எதற்கு அவ்வளவு அவரசரமாக வெளியோ வந்தோமோ அதற்கு வேலையே இல்லாமல் சுளுவாக மீன் தூண்டில் புழுவுக்கு ஆசை பட்டு மாட்டி கொள்ளுமே , அதை போல் வலிய சென்று குரங்கு தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்டதை போல் வைத்து கொண்டான். இவனுடைய சிறுபிள்ளை தனத்தை நினைத்து எனக்கு சிரிப்பதா அல்லது கோவ படுவதா என்று யோசிக்கும்போதே, வண்டி சென்று விட்டது, பெரிய சாதனை செய்தது போல் வந்து கொண்டு இருந்தான் என்னுடைய மாப்ஸ் , வாசலில் ஈட்டி காரனாய் டிக்கெட் செக்கர் இருந்தார், இவனிடம் நடவு சீட்டு கேட்டார் இவன் அவரிடம் அவனுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் "I am working for railways"  என்று ஒரே போடாய் போட்டான், அவர் சற்றும் சளைக்காமல் குரல் உயர்த்தி "What" என்றார் . உடனே இவன் குரல் பம்மியது, "My friend is working" என்று குரல் கம்மா சொன்னான். அதோடு இல்லாமல் வெளியே நின்று கொண்டு இருந்த என்னை பார்த்து "மாம்ஸ்" என்று அபய குரல் கொடுத்தான், அவர் ரெண்டு அடிமை சிக்கியதை நினைத்து சந்தோஷ பட்டார், அவரிடம் சென்று என்னை பற்றி விளக்கி விட்டு, பின்னர், அவசரமாய் வந்ததை அவருக்கு உணர்த்தி விட்டு அவனை மீட்டு வந்தேன், இப்போது நினைத்தாலும் வயிறு வலிக்கும் அளவுக்கு சிரிப்பு வரும், கொஞ்சம் இதை உருவாக படுத்தி பாருங்களேன். அதற்கு பிறகு நடந்த எங்கள் வீட்டு விசேசம் அனைத்திலும் அவன் தான் நாயகன் .. ஆனால் காமெடி நாயகன் ...இன்றும்  எங்கள்   வீட்டில் அதை கேட்டு ரசிக்க ஒரு ரசிக கூட்டமே இருக்கு எனக்கு... இதுக்கு நானு என்னோட அக்க மவன தான் நன்றி சொல்லணும்.
என் சுய விமர்சனம் 

அதிகாலை ...விடியலின் காலடி சுவடுகள் பதியும் நேரம்.. சட்டென முழிப்பு தட்டியது , எழுந்து உட்கார்ந்தேன் ... இருட்டை துலாவி விளக்கை போட்டவுடன் கண்கள் வெளிச்சத்தில் கூசியது. இருப்பினும் இரண்டு கைகளையும் பரபரவென தேய்த்து அதை உற்று பார்த்தேன்.. கிளையில்லா மரங்களாய் ரேகைகள் விரிய எழுந்து சென்று இயற்கை உபாதையை முடித்து விட்டு 
கண்ணாடி முன் நின்று பார்க்கும் போது முகத்தில் தெரிந்த சுருக்கங்கள் எனது வயதை எனக்கு ஞாபக படுத்தின. 


இன்று ஞாயிற்று கிழமை பசங்க எல்லாரும் ஊருல இருந்து வந்து இருப்பாங்க அனைவரும் ஒன்றாய் சேர்ந்து விளையாடி நாட்கள் ஆகிவிட்டன. இன்று அனைவரையும் ஒன்று சேர்த்து பார்க்க போகிறேன் என்று என்னும்போதே மனதுக்குள் சீழ்க்கை அடித்தது. எதனை வருடங்கள் ஆகி விட்டது இப்படி அனைவரும் ஒன்றாய் சேர்ந்து லூட்டி அடித்ததை நினைத்து மனம் சிறிது அதில் லயித்து, உடன் அதில் இருந்து மீண்டு கைபேசி எடுத்து யாருக்கு பேசலாம் என்று யோசித்ததில் உடனே தோன்றியது ஸ்ரீகாந்த் தான்... அருகில் இருக்கும் ஆபத்பாந்தவன் , தொடர்பு கொண்டபோது நெடு நேரம் கைபேசி அடித்து ஒய்ந்தது ஆனால் அவன் பேசவில்லை. பேசாமல் நேரே அவன் வீடு சென்று விடலாம் என்று நினைத்து விறு விறுவென கிளம்பினேன், 
கூப்பிடு தூரத்தில் தான் அவன் இல்லம். வீட்டில் சென்று அழைப்பு மணி அடித்தவுடன் வந்தது அவனுடைய தந்தை, என்னை பார்த்து விட்டு உள்ளே குரல் கொடுத்தார். டேய் ஸ்ரீகாந்த அண்ணா வந்து இருக்கார் கொஞ்சம் வந்துட்டு போ என்றார் . 
கண்களை கசக்கியவாறு வெளியே வந்த ஸ்ரீகாந்த் என்னை கண்டவுடன் "நேத்து ராத்திரி தூங்கும்போது மணி 2 ஆயிருச்சு விடிய காலைல வந்த இப்படி எழுப்பி வார்த்தையை மென்று விழுங்கியவாறு, என்னவிசயம் என்று பார்வையால் கேட்டான். ஒரு நிமிடம் அவனை பார்த்தேன் , வா உன்கூட கொஞ்சம் பேசணும் என்றவுடன் வேகமாக உள்ளே சென்றான். திரும்பி வரும்போது ட்ஷிர்ட் போட்டு கொண்டு வந்தான். வாங்க போகலாம் என்று , அப்பா கொஞ்சம் வெளிய போயிட்டு வரேன் என்று கூறியவாறு வந்து வண்டியில் தொத்தி கொண்டான். 
வண்டியை ஓட்டிக்கொண்டு செல்லும்போது , இப்போ எங்க போறோம் என்று கேட்டான். நேரா முதல்ல போய் நம்ம நாயர் கடையில் ஒரு காபி குடிச்சிட்டு அப்புறமா பெசாலம் என்றேன். மௌனமாய் தலை அசைத்தான். நாயர் கடையில் கூட்டம் அதிகம் இல்லை. காபி சொல்லி விட்டு அங்கிருந்த பழைய பேப்பரை கையில் எடுத்து வைத்து கொண்டான். நான் அவனையே பார்த்து கொண்டு இருந்தேன். அவனுக்கு அப்போது ஒரு 10 வயது இருக்கும் .
அரைகால் சராய் போட்டு கொண்டு என் வீடு தேடி வந்து என்னை கிரிக்கெட் விளையாட அழைத்த அந்த ஸ்ரீகாந்தை எனக்கு இன்றும் நினைவு இருக்கிறது. அப்போது பத்திரிகை துறையில் இருந்ததால் என்னிடம் ஒட்டுதல் ஜாஸ்தி . 
அவனுடைய உறவினர் அதில் பணிபுரிந்ததால் கூட இருக்கலாம். அவன் வயதையொத்த சிறார்களை கூப்பிட்டு கொண்டு வந்து விடுவான். அனைவரும் சேர்ந்து விளையாடுவோம் எனக்கும் நல்ல பொழுது போகும் . கணேஷ் , அரவிந்தன் , கார்த்திக் , ஸ்ரீவத்சன், ராஜேஷ், சிமோன், சண்முகநாதன், சாம் நிர்மல் என ஒரு பெரிய பட்டாளமே இதில் அடங்கும். 
அப்போதெல்லாம் இரண்டு டீம் பிரித்து கொண்டு விளையாடுவோம் , கணேஷ் அவுட் ஆகிவிட்டால் அவ்வளவு எளிதில் ஒத்துகொள்ள மாட்டான் . அவன் வெளியேறினால் தான் பந்து போடுவேன் என்று ஸ்ரீகாந்த் அப்படியே உட்கார்ந்துவிடுவான். மத்தியஸ்தம் பண்ண என்னை தான் அழைப்பார்கள். நானும் யாருடைய மனம் கோணாதவாறு தீர்ப்பு வழங்குவேன். என் மீது அவ்வளவு நம்பிக்கை. சமயத்தில் நானே தவறு செய்தால் கூட அதை பெரிது படுத்தாமல் சென்று விடுவார்கள். அப்போது நான் சிறிய பையனாகி அவர்கள் எதோ வளர்ந்த மனிதர்களாய் தோன்றும். 

போகலாமா என்ற குரல் கேட்டு நிஜத்திற்கு வந்தேன். ஸ்ரீகாந்த் வளர்ந்து விட்டான் , அவன் மட்டும் அல்ல அவனுடைய கூட்டாளிகளும் தான். ஆனால் வளர்ந்து விட்டது அவர்கள் மட்டும் அல்ல அவர்களுடைய எண்ணங்களும் தான். என்னால் மட்டும் அந்த மாற்றத்தை ஏற்று கொள்ள முடியவில்லை. 
சடாரென அனைவரும் என்னை விட்டு விலகி சென்றதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இன்றும் அவர்களை கால்சராய் போட்டு கொண்டு திரியும் பள்ளி சிறுவர்களாய் தான் உணர்ந்தேன். ஆனால் உண்மையை மறுக்க முடியாது. அவர்கள் வளர்ந்து விட்டது எனக்குள் ஏமாற்றமாய் இருந்தது. என்னிடம் கதை கேட்டு திரிந்த அவர்கள் இப்போது ஏகப்பட்ட கதைகளை எனக்கு சொல்லும்போது எனக்குள் இருக்கும் இன்னொரு சிறுவன் எழுந்து கொண்டான்.  இப்போது ஆவலாய் அவர்கள் சொல்லும் கதைகளை நானும் கேட்க ஆரம்பித்தேன், என்றாவது நாமும் சிறு குழந்தையாய் கதை கேட்கத்தான் வேண்டும் , ஏனெனில் அவர்கள் வளர்ந்து விட்டார்கள். 
பட்டம் விட்ட நேரத்தில் அவர்களிடம் ஏகப்பட்ட கதைகளை என் கற்பனையும் சேர்த்து அவர்களிடம் சொல்லி இருக்கிறேன் , அது மட்டுமல்ல விளையாடி விட்டு ஒய்வு நேரத்தில் அவர்களிடம் பத்திரிகை சம்பத்தப்பட்ட விசயங்களையும்  சினிமா துணுக்குகளையும் , இதர விசயங்களையும் கூறி இருக்கிறேன் . அப்போதெல்லாம் என்னை சுற்றி வட்டமாய் உட்கார்ந்து கொண்டு வாய் விரிய கேட்பார்கள் . இப்போது அவர்கள் முறை... நானும் கேட்க ஆரம்பித்தேன் ..எல்லோரும் கேட்போம்...

Monday, 28 February 2011

மண்ணுளி சிதறல்கள்

மண்ணுளி சிதறல்கள் 

காலையில் இருந்தே மனம் அலை பாய ஏதேதோ சிந்தனைகள்.. மனம் வெறுமையை சுவைக்க தொடங்கியது. சுமையாய் மனது கனத்து போய் இருந்தது. கடந்து போன காலங்களை கடிகார முட்களை திருப்புவது போல் திருப்பி விட மனம் பிரயாசைபட்டது. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று சொல்வது பொய்யோ என்று நினைக்க தோன்றியது. இவையெல்லாம் கணவாய் இருக்க கூடாதா என்று மனம் கெஞ்ச தொடங்கியது. 
எல்லாம் ஆயிற்று . என்னுடன் பயணித்திருந்த என் சகோதரன் மரித்து போனான். 
மற்றவர்களுக்கு அவனுடைய மரணம் ஒரு செய்தி தான். என்னை பொறுத்த வரை என் வாழ்வின் மிக பெரிய நிகழ்வாய் ஆனது. எல்லோரும் நல்ல விஷயங்கள்  அடிகடி நடக்க வேண்டும் என்று தான் பிரார்த்தனை செய்வார்கள். 
இதனை செய்த அந்த ஆண்டவன் என்னையும் எடுத்து கொண்டால் மிகவும் நலமாய் இருக்கும். என்னிடம் இருந்து பிரித்து விட்டு ஏதுமே நடவாது போல் மௌனமாய் இருக்கிறான். என்னை இப்படி சோதித்து பார்க்க அவன்  எத்தனை நாள் யோசித்திருப்பானோ ? 
காலம் மிக வேகமாய் ஓடுவதாய் தோன்றியது. நேற்று நடந்தது போல இருக்கிறது. மனம் இளம் பிராயத்தை நோக்கி பின்னோக்கி ஓடியது. அவனுக்கும் எனக்கும் இடைவெளி இரண்டு வருடம் தான் ,
இருவரும் ஒருசேர பார்த்தால் இரட்டை பிறவி போல் தெரிவோம்.
ஒரே போர்வையில் எல்லை சண்டை போட்டதாகட்டும் .
ஒரே படுக்கையில் மூச்சா போய்விட்டு ஒருவரை ஒருவர் கோள் சொல்லி கொண்டு  சண்டை போட்டு கொள்வதில் இருந்து ,
இதில் என் அண்ணன் முரளி சமர்த்தன் , எதுவும் பேசாமல் என்னை மாட்டி விட்டு விட்டு நமட்டு சிரிப்புடன் சென்று விடுவான்.
நானும் அவனும் ஒரே பள்ளியில் அடுத்தடுத்த வகுப்பில் இருப்போம். எதுவாக இருந்தாலும் என்னை தான் கூப்பிட்டு அனுப்புவார்கள். காலையில் கடவுள் வாழ்த்து பாடுவதில் இருந்து , உறுதி மொழி கூறி வகுப்பிற்கு போன பிறகு எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் எங்கள் இருவரின் தலை தான் உருளும். சமயத்தில் அவனுக்கு துணையாக நானும் முட்டிகால் போட்டு இருக்கிறேன் .

அதுவும் எங்கள் குடும்பம் வேறு மெத்த படித்தவர்கள் அதிகம். அதனால் எங்கள் மீது கரிசனம் வேறு , 

முரளிக்கு கணக்கு என்றாலே காத தூரம் ஓடுவான். அவன் ஓட்டத்தை ஈடு செய்வது போல் நானும் கூடவே ஓடுவேன். எனக்கும் கணக்கு பிடிக்காது. ஆனால் எங்கள் வீட்டில் கட்டுப்பாடு அதிகம். கணக்கு பயிற்சி என்ற பெயரில் 
ஒரு நாளைக்கு இத்தனை கணக்கு போட்டால் தான் சாப்பாடு என்று வேறு 
எதோ ராணுவ பயிற்சியை மேற் கொள் காட்டி விடுவார்கள்.

இதை எல்லாம் கூட சகித்து கொள்ளலாம் ஆனால்
கோடை விடுமுறை எதற்கு விடுகிறார்கள் ? ஒரு வருடம் படித்து கொஞ்சம் ஓய்விற்கு தானே? 
ஆனால் அப்போது தான் எங்கள் வீட்டில் ஏதோ பரீட்சைக்கு படிக்க சொல்வது போல் . ,
எல்லா வருட தேர்வு வினாத்தாளை சேர்த்து வைத்து மொத்தமாய் பயிற்சி எடுப்பார்கள்.
அப்போதெல்லாம் எனக்கு நீரோ மன்னன் தான் நினைவுக்கு வருவான். ஏனெனில்  அவன் ஒருவன் தான் அரண்மனை எரியும் போது பிடில் வாசித்தான் என்று கூறுவார்கள். சரித்திரத்தில் அவன் பெயர் நிலைத்து நின்றதற்கு அவன் செய்கை ஒரு காரணம். எனக்கும் அது போல் தான் தோன்றும். 
ஆனாலும் அது நடைமுறையில் முடியாது.. நானும் மன்னன் அல்லவே. எங்கள் வீட்டிற்கு விருந்தினர் வருகை மிக பெரிய வரப்ரசாதம் . அவர்கள் வந்தால் எங்களுக்கு சிறிது இடைவேளை இந்த தொல்லையில் இருந்து., இதற்காகவே யாராவது வர வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்தனை செய்த காலங்களும் உண்டு.  அதிலும் வருபவர்கள் எங்களுக்கு சாதகமாய் இருத்தல் சுகம். 

இப்படி இருந்த கால கட்டத்தில் ஒரு நாள், தூரத்து உறவினர் ஒருவர் மரித்ததை தொடர்ந்து எங்கள் வீட்டின் ராஜாவும் ராணியும் வெளியூர் பயணித்தார்கள் . எங்களுக்கு ஒரே கொண்டாட்டம் .ஆனால் அதுவும் சிறிது நேரம் தான் நீடித்தது . காரணம் அவர்கள் வரும் சமயம் நாங்கள் இத்தனை பாடங்கள் படித்து முடித்து இருக்க வேண்டும் என்று கட்டளை. இதை கண்காணிக்க எனது அக்காவை நியமனம் செய்தார்கள். சொல்லவே வேணாம் நல்ல நேரத்தில் எங்களை பாடாய் படுத்தி எடுக்கும் என் அக்கா இப்போது சொல்லாமலே ஹிட்லர் புன்னகை பூத்தார். நான் ஹிட்லரை நேரில் கண்டதில்லை 
ஆனால் என் அக்காவை உருவக படுத்தி பார்த்தால் பெரிய வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லை. ஆண்பால் /பெண்பால் வேற்றுமை தவிர. 
எனக்கும் என் அண்ணன் முரளிக்கும் வெளியே சென்று பட்டம் விட வேண்டும் என்று கொள்ளை ஆசை. பட்டம் செய்து வீட்டிற்கு கீழே உள்ள படியின் ரகசிய இடத்தில வைத்தாயிற்று. ஆனால் போக முடியாத வாறு எங்களை பாடம் படிக்க சொல்லும் அக்காவை எப்படி சமாளிப்பது? அதுவே ஒரு மிக பெரிய கேள்வியாய் இருந்தது. இப்போது இருக்கும் வசதிகள் அப்போது எது? 
என்ன சொல்லி தப்பி செல்வது.? எனது அக்காவிற்கு நாவல் படிக்கும் பழக்கம் இருந்தது . அதை சாக்காய் வைத்து கிளம்பலாம் என்று இருவருமே திட்டம் போட்டோம் . அக்கா எங்களை அவளது தோழி வீட்டிற்கு அனுப்பி புத்தகம் வாங்கி வர சொன்னார்கள் . ஆனால் விதி அதன் சதியை செய்தது . அக்கா எங்களை அவளது தோழி வீட்டிற்கு அனுப்ப சம்மதித்தாள், ஆனால் எங்களில் ஒருவர் தான் செல்லவேண்டும் என்ற ஒரு நிர்பந்தத்தோடு? என்ன செய்வது ? எங்களுக்குள் சண்டை மூண்டது.  அக்கா தனது பிரமாஸ்திரத்தை எடுத்தாள் . இருவருமே செல்ல வேண்டாம் என்று கூறி விட்டாள். மீண்டும் நாங்கள் சமாதானமாகி 
புதிதாய் ஒரு வேலையை நாங்களே உருவாக்கினோம் . எங்கள் வீட்டிற்கு அருகாமையில் வயல் வரப்பு இருப்பதால் கரிப்பான் செடிகள் முளைத்து இருக்கும், அதை நாங்கள் பிடுங்கி வருகிறோம் என்று கூறி விட்டு சிட்டாய் பறந்தோம் பட்டம் விடுவதற்கு. 

நேரம் போனது தெரியாமல் நாங்கள் விளையாடி கொண்டு இருந்தோம். சூரியன் எங்களுக்கு டாட்டா காட்டி விட்டு சென்று விட்டான். அப்போது தான் எங்களுக்கு நேரமாகி போனது தெரிந்தது. போதா குறைக்கு முரளியின் பட்டம் அறுந்து போனது அதை எடுக்க நாங்கள் காடு மலை எல்லாம் கடந்து படத்தில் காட்டுவது போல  ஏக ரகளை செய்து அதை எடுத்து கொண்டு வந்து விட்டோம்.. அப்புறம் தான் அதன் விளைவு தெரிந்தது. நாங்கள் வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் , ஒரு பையனை அழைத்து கொண்டு நடுத்தர வயதில் ஒரு பெண்மணி எங்கள் வீட்டின் கதவை தட்டினார். கூட வந்த பையனை பார்த்த உடன் எனக்கு எல்லாம் விளங்கி விட்டது. அவன் தலையில் கட்டு கட்டி இருந்தான். உபயம் எனது அண்ணன் முரளி. பட்டம் அறுந்து போன ஆத்திரத்தில் கல்லை எடுத்து இவனை நோக்கி எறிந்தான் , அவ்வளவு தான் எனக்கு தெரியும் .. மற்றவை அந்த அம்மையார் வந்த உடன் மொத்தமாய் விளங்கியது. விசாரணை ஆரம்பமானது. அந்த அம்மா சொல்ல சொல்ல எனது அக்காவின் முகம் அஷ்ட கோணல் ஆனது. எனக்கு என் தலையை பிய்த்து பின்னால் வைத்தது போல தோன்றியது. முடிவாய் அக்கா அவர்களை சமாதான படுத்தி அனுப்பி விட்டு  எங்கள் இருவரையும் ஒருவரை ஒருவர் காதை பிடித்து கொள்ள செய்து தோப்புகரணம் போட சொன்னாள். அத்தோடு முடிந்தது என்று தப்பு கணக்கு (?) போட்டோம். எங்கள் அம்மா அப்பா வந்த உடன், இடம் பொருள் ஏவல் இல்லாமல் மொத்தத்தையும் இரத்தின சுருக்கமாய் சொன்னாள். எங்கள் வீட்டில் ஒரு சம்பிரதாயம் உண்டு . நாங்கள் தலை வாரும் நிலை கண்ணாடியின் பின்புறத்தில் நீண்ட ஒரு பிரம்பு உண்டு . 
சிவன் பிரம்படி பட்டு புட்டுக்கு மண் சுமந்தான் என்பதால் எங்களையும் சிவனாக பார்த்தார் என் தந்தை.  சும்மா சொல்ல கூடாது அடி ஒவ்வொன்றும் சுளீர் சுளீர் என்று சத்தத்தோடு விழும். இரண்டு நாளைக்கு வெளியில் செல்ல சங்கோசமாய் இருக்கும் அடி அனைத்தும் முட்டிக்கு கீழ் தான் , அது வரையில் சந்தோசம்/ உப்பிய அப்பமாய் காலில் அடி வாங்கிய தழும்பு தெரியும்.. நெற்றி கண் இருந்தால் அனைவரையும் பொசுக்கி விட மனது ஆசை படும் . எல்லாம் ஆசையோடு சரி.

ஆனால் எங்கள் தந்தை நாங்கள் தூங்கிய பிறகு அடித்ததற்கு வருத்த பட்டு எங்கள் கால்களுக்கு எண்ணெய் போட்டு நீவி விடுவார். சமயத்தில் கண்ணீர் கசிந்தும் இருக்கிறார். இவையெல்லாம் எனது தாய் சொல்ல கேள்வி பட்டு இருக்கிறோம்.. 
வருடங்கள் மாதங்களாகி, மாதங்கள் வாரங்களாகி, வாரங்கள் நாட்களாகி , நாட்கள் மணிகளாகி , மணிகள் நிமிடங்களாக ஓடிய ஓட்டத்தில் இப்போது நாங்கள் எங்கள் வயோதிகத்தை சுவைக்க ஆரம்பித்து விட்டோம் ஆனால் சின்ன சின்ன சந்தோசங்களை தொலைத்து விட்டு இன்றும் ஓடி கொண்டிருக்கிறோம் சேணம் கட்டிய குதிரையாக...